×

புதுகை, திருச்சியில் ஜல்லிக்கட்டு: 1350 காளைகளுடன் 620 வீரர்கள் மல்லுக்கட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை மோட்டுமுனி கோயில் பங்குனி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்றுகாலை நடந்தது. இதற்காக புதுகை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. இறுதியில் 600 காளைகள், 270 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இருப்பினும் பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து களத்தில் நின்று விளையாடியது. காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், மின்விசிறி, மிக்சி, டைனிங் டேபிள், எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.

திருச்சி: திருச்சி தெற்கு காட்டூர் அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பாலாஜி நகர் விரிவாக்க பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.15 மணிக்கு துவங்கியது. ஜல்லிக்கட்டை லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 மாடுகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், சோபா செட், டிரஸ்சிங் டேபிள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த மாட்டின் உரிமையாளர், மாடுபிடி வீரருக்கு பைக் வழங்கப்படுகிறது.

The post புதுகை, திருச்சியில் ஜல்லிக்கட்டு: 1350 காளைகளுடன் 620 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Tiruchi ,Pudukkotta ,Pudukkottai District Gandarvakotta ,Adanakkotta Mottuni Temple Bankuni festival ,Trichy ,Kasal ,
× RELATED பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன